பண்டைக்காலப் பண்பாடு - ஒரு விளக்கம்


6.1 பண்டைக்காலப் பண்பாடு - ஒரு விளக்கம்


வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைவதையே பண்டைக் காலத் தமிழர் மிகச் சிறந்த பண்பாட்டுக் கூறாகக் கருதினர்.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே 
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே (புறம் :214)

(குறும்பூழ் = சிறு பறவை, வறுங்கை = வறிய கை)

என்று பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் கூறுகின்றார். இதன் பொருள் என்ன தெரியுமா? யானையை வேட்டையாட வேண்டும் என்று போகின்றவன் யானையை எளிதாகப் பெற்றுவிடக்கூடும். ஒரு சிறிய பறவையை வேட்டையாட வேண்டும் என்று போகின்றவன் அது கிடைக்காமலும் திரும்பக்கூடும். எனவே ஒருவன் உயர்ந்த குறிக்கோளைப் பெறவேண்டும் என்பது இதன் பொருள். பிறர்க்கு உதவ வேண்டும்; தன்னலமின்றி வாழவேண்டும்; நல்லவைகளைச் செய்ய இயலாவிட்டாலும் தீயவைகளைச் செய்யவே கூடாது.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் 
அல்லது செய்தல் ஓம்புமின் (புறம் : 195)

என்கிறார் புலவர் ஒருவர். மேலும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் பண்டைத் தமிழர். அறத்திலிருந்து தவறுதல் கூடாது; தவறினால் பழிவரும் என்று கருதினர். அப்பழி தாங்க முடியாதது என எண்ணினர். எனவே அறம் செய்வதைப் பண்பாட்டின் ஒரு கூறாகக் கருதிச் செயல்பட்டனர்.

6.1.1 சங்கங்களும் சங்க காலமும்

சங்ககாலம் என்று அக்காலம் கூறப்படுவதன் காரணம் யாது? சங்கம் என்றால் கூட்டம், ஒரு தொகுப்பு, திரட்சி என்பது பொருள். பௌத்தர்களும், சமணர்களும் துறவிகளின் கூட்டத்தைச் சங்கம் என்று குறித்தனர். புலவர்களின் கூட்டம் சங்கம் என்ற பெயரைப் பெற்றது. புலவர்களின் சங்கம் இருந்தமையால் அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது. பழந்தமிழ் நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்தன. அக்காலத்தில் ஒன்றை ஒன்று அடுத்துவந்த இம்மூன்று சங்கங்களும் தமிழ் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தன.

முதற்சங்கம் பாண்டி நாட்டின் தென்பகுதியைக் கடல் கொள்வதற்கு முன்பிருந்த பாண்டியர் தலைநகரில் இருந்தது. அச்சங்கத்தில் அகத்தியர் போன்ற பெரும்புலவர்கள் இருந்தனர். அச்சங்கம் நெடுங்காலம் நிலைபெற்றிருந்தது. பின்பு அந்நகரைக் கடல் கொண்டபின் அச்சங்கமும், அச்சங்கம் உண்டாக்கிய நூல்களும் அழிந்தன.

பிறகு, கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கத்திலேயே தொல்காப்பியர் இடம் பெற்றிருந்தார். புலவர் பலர் பலவகை நூற்களை இச்சங்கத்தில் இருந்து படைத்தனர். கபாடபுரம் கடலால் கொள்ளப்பட்டது. மூன்றாம் சங்கம் இன்றுள்ள மதுரையில் தோற்றுவிக்கப் பட்டது. இச்சங்கத்திலேயே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பதினெட்டுச் சங்க நூல்கள் அரங்கேறின.

சங்கங்கள் மூன்றும் இருந்த காலம் பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. எனினும், மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கம் கி.பி. 300 வரை இருந்தது என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

 

இடம்காலம்பெரும்புலவர்இயற்றிய நூல்கள்
முதற் சங்கம்கடல் கொண்ட பாண்டியர் தலைநகர் பழைய தென்மதுரைஅறுதியிட்டுக் கூற முடியவில்லைஅகத்தியர்அகத்தியம்
இடைச் சங்கம்கபாடபுரம்அறுதியிட்டுக் கூற முடியவில்லைதொல்காப்பியர்தொல்காப்பியம்
கடைச் சங்கம்மதுரைகி.பி.300 வரைகபிலர் 
பரணர் ஒளவையார் திருவள்ளுவர்
பத்துப்பாட்டு எட்டுத்தொகை திருக்குறள்

 

சந்திரகுப்தன் மகனான பிந்துசாரன் கி.மு. 301 முதல் 273 வரை அரசாண்டவன். இவன் தமிழகத்தைத் தவிர்த்த தென்னாட்டுப் பகுதிகளை வென்றான். அவனால் தமிழகத்தை வெல்ல முடியவில்லை. ஏனெனில் தமிழகத்தில் வலிமைமிக்க தமிழரசர் கூட்டணி ஒன்று இருந்தது. தமிழரசர் கூட்டணி ஒன்று 113 ஆண்டுகளாக வலிமை பெற்றிருந்தது என்று கி.மு. 165இல் கலிங்க அரசனாக இருந்த காவேலனின் கல்வெட்டு ஒன்று குறிக்கின்றது. மௌரியர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்ததனைச் சங்க இலக்கியங்களான அகநானூறும் புறநானூறும் குறிக்கின்றன. எனவே பல்லவர் தமிழ்நாட்டை ஆள்வதற்கு முற்பட்ட காலத்தைச் சங்க காலம் எனக் குறிக்கலாம். சங்க இலக்கியங்கள் காட்டும் வரலாற்றுக் குறிப்பின் அடிப்படையில் கி.மு. மூன்று முதல் கி.பி. மூன்று வரையிலான அறுநூறு ஆண்டுக் காலத்தைச் சங்ககாலமெனக் கொள்ளலாம்.

6.1.2 வழிகாட்டும் பண்பு

சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும். அவற்றில்பத்துப்பாட்டு என்பது 

1. திருமுருகாற்றுப்படை 
2. பொருநராற்றுப்படை 
3. சிறுபாணாற்றுப்படை 
4. பெரும்பாணாற்றுப்படை
5. முல்லைப்பாட்டு 
6. மதுரைக்காஞ்சி 
7. நெடுநல்வாடை 
8. குறிஞ்சிப்பாட்டு 
9. பட்டினப்பாலை 
10. மலைபடுகடாம் 

என்ற பத்துப்பாடல்களையும் கொண்ட தொகுப்பாகும். இப்பத்தில் மலைபடுகடாம் என்பதற்குக்கூத்தராற்றுப்படை என்ற பெயரும் உண்டு. எனவே பத்து நூல்களில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை என்னும் நூல்வகைக்கு உரியன.

ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்துதல் என்று பொருள். வள்ளல் ஒருவனிடம் செல்வம் பெற்று வறுமை நீங்கிய ஒருவன், திரும்பி வரும் வழியில் காணுகின்ற வறியவன் ஒருவனிடம், "இன்னாரை அடைந்தால் நீயும் செல்வன் ஆகலாம்" எனக் கூறி வழிகூறுதலாகும்.

6.1.3 புலவரைப் போற்றிய பண்பு

கபிலர் என்ற புலவர் சேரன் வாழியாதன் அரசவையில் இருந்தார். அரசன் அப்புலவரின் கையைப் பிடித்துப் பார்த்தான். அது மிகவும் மென்மையாக இருந்தது. 'என்ன உங்கள் கை மிகவும் மென்மையாக உள்ளதே' என்றான் அரசன். அதற்குக் கபிலர் 'கறிசோறு சாப்பிட்டு வருந்துவதைத் தவிர இந்தக் கைகள் வேறு என்ன கடுமையான தொழிலைச் செய்கின்றன?' என்று கூறினார். இவ்வாறு புலவர்கள் அரசர்களின் நிழலில் இனிது வாழ்ந்தனர்.

முரசுகட்டில் அரசர்களின் வீரமுரசத்தை வைப்பதற்கு உரியது. ஒருமுறை சேரமானின் முரசை நீராட்டிக் கொண்டு வரச் சென்றிருந்தார்கள். அந்த வேளையில் அரசனைக் காணவந்த மோசிகீரனார் என்ற புலவர், நடந்துவந்த களைப்பால் முரசுகட்டிலில் அறியாமல் ஏறிப்படுத்து உறங்கி விட்டார். முரசு வைக்கும் கட்டிலில் வேறு யாராவது உட்காருவதுகூட அம்முரசுக்குரிய அரசனை அவமானப்படுத்தும் செயலாகும்.

முரசு நீராடி வந்தது. அரசனும் வந்தான். யாரோ ஒருவர் முரசுகட்டிலில் உறங்குவதைக் கண்டு அரசன் சினம் கொண்டான். வாளை உருவி வெட்டிவிடவும் கருதினான். ஆனால் உறங்குபவர் புலவர் ஒருவர் என்பதை உணர்ந்தவுடன் அவன் மனம் மாறியது. புலவர் தன்னை மறந்து வியர்வையோடு உறங்குவது கண்டு மனம் உருகினான். விசிறி ஒன்று எடுத்துப் புலவரின் வியர்வை தீர விசிறினான்.

இவை போலும் நிகழ்ச்சிகள் பல பழங்காலத்தில் நிகழ்ந்துள்ளன என்பதற்குப் பண்டை இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் மன்னர்கள் புலவர்களைப் போற்றிய பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.