பொருளிலக்கணம்


5.1 பொருளிலக்கணம்
 

உலகில் உள்ள பல மொழிகளில் எழுத்துக்கும்,  சொல்லுக்கும் இலக்கணம் கண்டனர்.  ஆனால், தமிழ்மொழியில் மட்டுமே மக்கள் வாழ்க்கை முறைக்கும் உரியதான இலக்கியம் படைப்பதற்குரிய இலக்கணமாகப் பொருளிலக்கணத்தை இயற்றியுள்ளனர். 
 

தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருளாக அமைந்தது இப்பொருள்தான்.பொருளை,   அகப் பொருள், புறப் பொருள் என இருவகைப்படுத்துவர்.
 

'ஒத்த அன்புடைய - தலைவன் தலைவியின் உள்ளத்திற்கு மட்டுமே புலன் ஆகும் இன்ப நிகழ்வை' அகப் பொருள் என்பர். (அகம் - உள்ளம்).
 

பிறருக்குக் கூறக்கூடியதாய் அமைந்த அறம்,  பொருள்,  அவற்றின் நிலையின்மை,  வீடுபேறு ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது புறப்பொருள் ஆகும்.
 

சுருக்கமாகக் கூறின்,  அகப்பொருள் என்பது 'தாமே மகிழ்வது';  புறப்பொருள் என்பது 'பகிர்ந்து மகிழ்வது'.

 

5.1.1 அகப்பொருள்
 

அகப்பொருள் பற்றி நிகழும் ஒழுக்கத்தை அகத்திணை (திணை-ஒழுக்கம்)   என்பர். அகத்திணையைக் குறிஞ்சித் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, பாலைத் திணை என ஐந்து வகையாகப் பகுத்துக் கூறுவர். இவற்றையே அன்பின் ஐந்திணை என்பர்.
 

இவை ஐந்தினோடு,  கைக்கிளை,  பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து அகத்திணை ஒழுக்கம் ஏழு என்று கூறுவர்.
 

கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். பெருந்திணை என்பது பொருந்தாக் காதல். ஆதலின் அவை இரண்டும் சிறப்புடையன ஆகா.
 

அன்பின் ஐந்திணை சிறப்புற நடத்தற்பொருட்டு ஒவ்வொன்றுக்கும் முதற்பொருள்,  கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று பொருள்கள் வகுத்துள்ளனர். அவற்றைக் காண்போம்.
 

5.1.1.1 முதற்பொருள்
 

முதற்பொருள் நிலம்,  பொழுது என இரு வகைப்படும்.  நிலமாவன,  குறிஞ்சி,  முல்லை,  மருதம், நெய்தல் பாலை என்னும் ஐந்து வகைப்படும்.
 

ஐவகை நிலம்
 

1.

குறிஞ்சி

-

மலையும் மலை சார்ந்த இடமும்.

2.

முல்லை

-

காடும் காடு சார்ந்த இடமும்.

3.

மருதம்

-

வயலும் வயல் சார்ந்த இடமும்.

4.

நெய்தல்

-

கடலும் கடல் சார்ந்த இடமும்.

5.

பாலை 

-

மணலும் மணல் சார்ந்த இடமும்.

அகப்பொருள் நிகழ்வதற்கு ஏற்ற பொழுதைப் பெரும்பொழுது,  சிறுபொழுது என இரண்டு வகையாகப் பிரிப்பர். 
 

பெரும்பொழுது
 

பெரும்பொழுது என்பது,  ஓர் ஆண்டின் கூறுபாடு.  ஓர் ஆண்டுக்கு உரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது எனப்படும்.  ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள் கால அளவினை உடையதாம்.
 

பெரும்பொழுது
 

உரிய திங்கள்
 

1.

இளவேனிற்காலம்

-

சித்திரை, வைகாசி

2.

முதுவேனிற்காலம்

-

ஆனி, ஆடி

3.

கார்காலம்

-

ஆவணி, புரட்டாசி

4.

குளிர்காலம்

-

ஐப்பசி, கார்த்திகை

5.

முன்பனிக்காலம்

-

மார்கழி, தை

6.

பின்பனிக்காலம்

-

மாசி, பங்குனி

(வேனிற்காலம் - வெயிற்காலம் ; கார்காலம் - மழைக்காலம் ; முன்பனிக்காலம் - மாலைக்குப் பின் பனி விழும் காலம்; பின்பனிக்காலம் - காலையில் பனி விழும் காலம்).
 

சிறுபொழுது
 

சிறுபொழுது என்பது நாளின் கூறுபாடு. ஒரு நாளை, 1. வைகறை, 2. காலை, 3. நண்பகல், 4. எற்பாடு, 5. மாலை, 6. யாமம் என்பனவாக, ஆறு கூறுகளாக்கி, அவற்றைச் சிறுபொழுது என வழங்குவர்.
 

ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது. எனவே, ஆறு சிறுபொழுதும் சேர்ந்து, இருபத்து நான்கு மணி நேரம் ஆகும்.
 

இனி, ஒவ்வொரு பொழுதுக்கும் உரிய நேரத்தை அறிந்துகொள்வோம்.
 

சிறு பொழுது 
 

உரிய நேரம்
 

1.

வைகறை

-

இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

2.

காலை

-

காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை

3.

நண்பகல்

-

முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

4.

எற்பாடு

-

பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

5.

மாலை

-

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

6.

யாமம்

-

இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை

('எற்பாடு' என்பது எல்-படு நேரம்; அதாவது சூரியன் மறையும் நேரம். 'எல்' என்பதற்குச் சூரியன் என்பது பொருள்).
 

5.1.1.2 கருப்பொருள்
 

ஐவகை நிலங்களுக்கும் உரிய, தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் ஆகியவற்றைக் கருப்பொருள் என வழங்குவர். சான்றாக, குறிஞ்சி நிலத்துக்கு உரிய கருப்பொருளைக் காண்போம்:-
 

நிலம்

-

குறிஞ்சி

தெய்வம்

-

முருகன்

மக்கள்

-

சிலம்பன், வெற்பன், கானவர் குறவர், குறத்தியர்.

உணவு

-

தினை, மலை நெல், மூங்கிலரிசி

விலங்கு

-

புலி, கரடி, யானை, சிங்கம்

பூ

-

குறிஞ்சி, காந்தள்

மரம்

-

அகில், தேக்கு, சந்தனம், மூங்கில்

பறவை

-

கிளி, மயில்; ஊர்-சிறு குடி

நீர்

-

அருவி நீர், சுனை நீர்

பறை

-

தொண்டகப் பறை

யாழ்

-

குறிஞ்சி யாழ்

பண்

-

குறிஞ்சிப் பண்

தொழில்

-

தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்.

இவை போன்றே, பிற நான்கு வகை நிலங்களுக்கும் கருப்பொருள் உண்டு.
 

5.1.1.3 உரிப்பொருள்
 

ஒவ்வொரு திணைக்கும் உரிய அக ஒழுக்கத்தை உரிப்பொருள் என்பர்.உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிய உரிப்பொருள் பின்வருமாறு.
 

குறிஞ்சி

-

புணர்தல்

-

தலைவனும் தலைவியும் ஒன்றுசேர்தல்.

முல்லை

-

இருத்தல்

-

தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ளுதல்.

மருதம்

-

ஊடல்

-

தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்.

நெய்தல்

-

இரங்கல்

-

தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.

பாலை

-

பிரிவு

-

தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.

இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள்,      கருப்பொருள்,      உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன.  திணை,  நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.  மற்றவற்றுள் காலம், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச் சிறப்பாக அமையக்கூடியவை ஆகும். 
 

எல்லா நிலங்களுக்கும் சிறுபொழுது,  பெரும்பொழுது ஆகியவை பொதுவானவையே.  ஆயினும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாகச் சொல்லப்பட்டவை அந்தந்தத் திணைக்குச் சிறப்பானவை ஆகும். 
 

பறவைகளும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக்கூடும்.  எனினும், அந்தந்த நிலங்களுக்கு அவை சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன. உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் கருதிச் சொல்லப்பட்டுள்ளன. 
 

5.1.2 புறப்பொருள்
 

பிறரிடம் கூறத்தக்க அறம், பொருள், வீடு பற்றியும் கல்வி, வீரம், கொடை, புகழ் பற்றியும் கூறுவது புறப்பொருள் ஆகும்.
 

புறத் திணைகள் பன்னிரண்டு வகைப்படும். அவையாவன, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்பனவாகும்.
 

பண்டைத் தமிழர் மறத்திலும் அறம் கண்ட பாங்கினை இத்திணைகளால் அறியலாம்.
 

1.

வெட்சித் திணை

-

பகை நாட்டினர் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருதல்.

2.

கரந்தைத் திணை

-

பசுக்களை மீட்டு வருதல்.

3.

வஞ்சித் திணை

-

பகைவர் நாட்டின்மீது படை எடுத்தல்.

4.

காஞ்சித் திணை

-

படை எடுத்து வந்தவர்களை எதிர்நின்று தடுத்தல்

5.

உழிஞைத் திணை

-

பகை நாட்டினர் மதிலை வளைத்துப் போர் புரிதல்

6.

நொச்சித் திணை

-

பகைவர்கள், மதிலைக் கைப்பற்ற விடாமல் காத்தல்

7.

தும்பைத் திணை

-

இரு நாட்டு வீரர்களும் எதிர்நின்று போரிடல்

8.

வாகைத் திணை

-

பகைவரை வென்றவர் வெற்றி விழாக் கொண்டாடுதல்

9.

பாடாண் திணை

-

ஒருவருடைய புகழ், கல்வி, கொடை முதலியவற்றைப் புகழ்ந்து 
  பாடுதல்

10.

பொதுவியல் திணை

-

மேற்கூறிய புறத்திணைகளுக்குப் பொதுவாய் அமைந்தனவும்
  அவற்றுள் அடங்காதவும் பற்றிக் கூறுதல்.

11.

கைக்கிளை

-

ஒருதலைக் காதல், ஆண், பெண் இருவருள் ஒருவரிடம் மட்டும் 
  தோன்றும் அன்பு/காதல்

12.

பெருந்திணை

-

பொருந்தாக் காதல் - ஒத்த வயது உடைய தலைவன்-தலைவி 
  அல்லாதரிடம் தோன்றும் காதல்.

மேற்காட்டிய புறத்திணைகளுள், வெட்சி முதல் வாகை வரை, அவ்வகைப் பூக்களை அடையாளமாக அணிந்து, அவ்வீரர்கள் வருவர் என்பதை அறிக. இவை யாவும் பூக்களால் பெற்ற பெயர்கள்.